காலத்தால் அழியாத கலைஞர்கள் வரிசையிலே......
                                                             

                                                               T.M.சௌந்தரராஜன்                                    

தென்னகத்திரையுலகின் முன்னணிப்பாடகர்களிலே திரு.T.M.சௌந்தரராஜன் அவர்கள் சௌராஷ்ரிடப் பிராமண இனத்தைச் சேர்ந்தவர்.இவரது மொழிக்கு எழுத்து வழக்கு இல்லை.24ம் திகதி பிறந்த இக்கலைஞர் மிகுந்த வறுமையில் வாடியவர்.ஜனாதிபதி நிதியிலிருந்து சங்கீதம் படிப்பதற்காக மாதம் ஒரு ரூபா வழங்கப்பட்டது. அப்பணத்திலேயே சங்கீதத்தை நன்கு பயின்றவர்.பரம்பரையாகவே  சங்கீத ஞானமுடைய குடும்பம் எனவே இசை அவருக்கு இயல்பாகவே வந்தது.

சென்னை வந்த அவர் சினிமாவிற்கு பின்னணி பாட முயன்றார். அக்காலத்தில் புகழ் பெற்ற தியாகராஜ பாகவதர் போன்று அவர் பாடிய பாடல்களை நன்கு பாடினார்.மிகுந்த சிரமத்தின் மத்தியில் இவருக்கு நரசிம்ம பாரதி நடித்த "பொன்முடி"படத்திற்கு பாடும் சந்தர்ப்பம் கிடைத்தது.அதில் வரும் "குலுங்கிடும் பூவில் எல்லாம்"என்ற பாடலை ஜமுனாராணியுடன் பாடினார்.பாடல் நன்கு அமைந்தது.

    பணக்கஸ்டமிகுதி ஒரு நாளைக்கு ஒரு பொழுதே அரைகுறையாகச் சாப்பிடும்நிலைஅப்போது தயாரான"தூக்குததூக்கி" படத்திற்கு இசையமைத்த திரு.G.இராமநாதன் அவர்கள்  இவருக்கு பாட சந்தர்ப்பத்தைக் கொடுத்தார். அப்படத்தில் வரும் ஒரு பாடலை இலவசமாகப் பாடுவதாகவும் பிடித்தால் முழுப்பாடலையும் இரண்டாயிரம்  ரூபாவிற்கு பாடுவதாகவும் மிகவும் நலிந்து கேட்டார். இராமநாதன்  அவர்கள் இவரது திறமையை உணர்ந்து பாடச்சந்தர்ப்பம் கொடுத்தார்.படம் வெற்றிபெற சந்தர்ப்பங்கள் மெல்ல மெல்ல கிடைக்கத் தொடங்கின.
                     எனினும் அக்காலகட்டத்தில் மிகவும் புகழுடன் இருந்த A.M.ராஜா, திருச்சி லோகநாதன் போன்றவர்களினால் இவருக்கு சந்தர்ப்பங்கள் மட்டாகவே இருந்தன.பல நூற்றுக்கணக்கான பக்திப் பாடல்கள் பாடினார்.அதிஷ்ட தேவதை மெல்ல அவர் பக்கம் திரும்பினாள்.
  
       1957இல் வெளியான "அன்பு எங்கே" படத்தில் வேதாவின் இசையமைப்பில் S.S.R க்குப்பாடிய  "டிங்கிரி டிங்காலே மீனாட்சி" என்ற பாடல் மிகுந்த புகழைக் கொடுத்தது மட்டுமன்றி சிங்கள மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற "பைலா" பாடல் ஆகும்.

       1960இல் இருந்து மிகுந்த புகழும் பணமும் குவியத் தொடங்கின.முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர்,சிவாஜி போன்றோருக்கு பின்னணி பாடினார்.தான் பாடாவிட்டால் படம் வெளியிடப்படாது என்ற நிலைக்கு வந்துவிட்டார்.1967 இல் மிகப்பிரமாண்டமானதும் 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட செலவில் தயாரானதுமான எம்.ஜி.ஆரின் "அடிமைப்பெண்" படத்திற்கு K.V. மகாதேவன் இசையமைப்பில் பாட அழைக்கப்பட்டார்.T.M.S இன் போதாத காலம் எம்.ஜி.ஆருடன் மனத்தாங்கல் ஏற்பட்டது.

         அப்படத்திற்கு புதிய பாடகர் அறிமுகமானார்.சினிமாவிற்கு பாடும் சந்தர்ப்பங்கள் குறையத் தொடங்கியது.கலைஞர்களிலே பாடகர்,கவிஞர், சோதிடர்களுக்கு நாவில் சரஸ்வதி அமைந்துள்ளார் எனக் குறிப்பிடுவார்கள். 

     1980 இல் வெளியான ஒரு தலை ராகம்,ரயில் பயணம் போன்ற படங்களில் இவர் பாடிய பாடல்கள் தனக்குத் தானே அழிவைத்தந்தது.முதல் பாடல் - "என் கதை முடியும் நேரம் இது" அவரது கதையும் முடியத்தொடங்கியது.அடுத்த பாடல் "நான் ஒரு ராசி இல்லா ராசா" இப்பாடல்கள் புகழைத்தந்தன எனினும் அவரும் திரையுலகில் ராசி இல்லா ராசா ஆகிவிட்டார்.பல ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய இக்கலைஞர் பாடிய திருப்புகழ் இன்றும் மணம் வீசும்,கல்லும் கனியாகும்.பட்டினத்தார் போன்ற படங்களை தயாரித்தும் நடித்தும் உள்ளார்.
   
      "போனால் போகட்டும் போடா"என்ற பாடல் இன்றும் அழியாது உள்ளது.இக் கலைஞரை கொழும்பு கலைமன்றமும் கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

                                                                                                                                                                                       ஆக்கம்        
                                                                                                                                                                      திரு.பா.நாகேஸ்வரன்

 
Make a Free Website with Yola.